மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கும் மக்கள் நீதி மய்யம் விரைவில் இளைஞர் அணி, கிராம அளவிலான குழுக்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது நடிக்க வாய்ப்பில்லாமல் கட்சி தொடங்குகிறார் என கமல்ஹாசன் எனப் பலராலும் அது விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கட்சியையும் கொடியையும் பிரபலபடுத்தி அவர் மக்களை சந்தித்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தனது கட்சி வேட்பாளர்களை களம் இறக்கினார்.
இந்தத் தேர்தலில் தினகரனின் அமமுக கட்சியும்,சீமானின் நாம் தமிழர் கட்சியும் பெரும்பான்மையான வாக்குகளை பிரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனைப் புறந்தள்ளி நாம் தமிழர் மற்றும் அமமுக கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்று சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை தக்க வைத்தது மக்கள் நீதி மய்யம். இதனால் அதிமுக, திமுக அணிகளுக்கு மாற்று சக்தியாக மக்கள் நீதி மய்யம் உருவாகி வருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கட்சி தொடங்கி 14 வது மாதத்திலேயே தேர்தலைச் சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம்,13 தொகுதிகளில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 3.72% வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழுவினர் ஆகியோருக்கு நேற்று சென்னையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருந்து அளித்தார். அப்போது, கட்சியின் பலம், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது நிர்வாகிகள் அளித்த யோசனைப்படி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர் அணி, கிராம அளவிலான குழுக்கள், வாக்குச்சாவடிகளை மையமாகக் கொண்ட குழுக்கள் போன்றவற்றை உருவாக்க முடிவு செய்யயப்பட்டுள்ளது.