போலிகளையும், விதிமீறலையும் உடனே கண்டுபிடிக்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச்சான்று வழங்கும் புதிய திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இதுவரை காகித வடிவிலான வாகன பதிவுச்சான்றும் (ஆர்.சி), லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிம அட்டையும் வழங்கப்பட்டு வந்தது. வாகன பதிவுச்சான்று எளிதில் கிழிந்துவிடும் தன்மையுடன் இருப்பதாலும், அதன் நம்பத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் அதை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் இத்திட்டம் படிப்படியாக ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அறிமுக செய்யப்பட்ட வருகிறது.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் உள்ள 16 போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச்சான்றிதழை ஸ்மார்ட் கார்டாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டு உரிம அட்டையில் ‘மைக்ரோ சிப்’,‘கியூஆர் கோட்’ போன்ற வசதிகள் உள்ளன. முன்பு வழங்கப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமத்தில் ‘ஹாலோகிராம்’ ஒட்டி கொடுக்கப்படும். ஆனால், புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை தயாரிக்கும்போதே அதில் ஹாலோகிராம் அச்சிடப்பட்டுவிடும். மேலும், அந்த உரிம அட்டையில் உள்ள ‘சிப்’பை தேசிய தகவல் மையம் அங்கீகரித்து ACTIVATE செய்திருந்தால் மட்டுமே நாம் அந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்த உகந்ததாகும். எனவே இந்த வகையான கார்டுகளை போலியாக தயாரிக்க முடியாது.
மேலும், ஸ்மார்ட் கார்டில் உள்ள சிப்-ஐ ஏடிஎம் கார்டு போல இயந்திரம் மூலம் ஸ்வைப் செய்தாலோ, கியூஆர்கோர்டை ஸ்கேன் செய்தலோ, அந்த நபரின் முந்தைய விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் விவரங்களை உடனே தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர சரக்கு வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்திலும், மற்ற வாகனங்களுக்கு சாம்பல் நிறத்திலும் ஸ்மார்ட் வாகன பதிவுச்சான்று வழங்கப்படும். மேலும் உரிமம் மாற்றம், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிப்போருக்கு ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வழங்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.