தமிழ்நாடு

பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் !

webteam

12ஆம் வகுப்பிற்கு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்பது தொடர்பாக 12ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், ஆராய்ச்சியாளர் நார்மன் ஈ போலாக், சுவாமிநாதன் மற்றும் நெல் ஜெயராமன் பற்றியும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில், திருவாரூர் மாவட்டம் அதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமன் 2005ஆம் ஆண்டு முதல், தனது பண்ணையில் நெல் விதை திருவிழா நடத்தியது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2016ஆம் ஆண்டு அதிரங்கத்தில் நடைபெற்ற நெல் விதை திருவிழாவில் தமிழகத்திலுள்ள 7 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது 156 வகையான பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நெல் ஜெயராமன், 2011ஆம் ஆண்டில் சிறந்த இயற்கை விவசாயத்திற்கான மாநில விருது பெற்றது, 2015ஆம் ஆண்டில் சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருது பெற்றது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர், நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர்.

ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 6ல் காலமானார்.