தமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கியது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா

webteam

விவசாயத்தினை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக நடைபெறும் 13வது தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடங்கியது.

பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்துபோகக்கூடாது என்ற உயரிய நோக்கில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது நெல் திருவிழா. 

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படும். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்பத்தர வேண்டும். அது மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்க முடியும் என்பதே இந்த நெல் திருவிழாவின் நோக்கம்.

2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த நெல் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு நெல் ரகங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் தெரிந்து வருகின்றனர். நம்மாழ்வாரின் மறைவுக்கு பிறகு நெல் திருவிழாவை வழிநடத்தியவர் நெல் ஜெயராமன்.

இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவருக்கு பின் நெல் திருவிழா நடக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில் 13வது தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று தொடங்கியது.

திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.