தமிழ்நாடு

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு : திருச்சி, காரைக்காலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

webteam

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, காரைக்கால், கும்பகோணம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கொச்சியிலிருந்து ஏ.எஸ்.பி. சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருபுவனம் வந்து முகாமிட்டு தங்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் மகன் விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து இன்று கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் காரைக்கால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து குழுவில் உள்ள அதிகாரியிடம் பேசிய போது ராமலிங்கம் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். சோதனையின் முடிவில் தான் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என தெரிய வரும் என்று எதிபார்க்கப்படுகிறது.