ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆலையை மூடக்கோரிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி பகுதியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது. அதிமுக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல்நலன், சுகாதாரம், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது. தாஜ்மஹாலுக்காக சில ஆலைகளை மூடியதுபோல் மக்கள் உயிருக்காக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தெரிவித்தார்.