வேதாந்தா நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி கோரியிருந்த நிலையில், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம், புதுச்சேரி சார்ந்த கடல் மற்றும் நிலப்பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதிகோரி கடந்த 2017ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிப்படி 32 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்படி வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் பயன், மதிப்பு, நிறைவேற்ற தேவைப்படும் காலம், கடலில் இருந்து அமைய உள்ள இடத்தின் தூரம் உள்ளிட்ட 32 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வன மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் வனத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளவற்றில் நிலப்பகுதிகளில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பான நிபந்தனைகள் இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் கழகத்தை சேர்ந்த சேதுராமன் கூறுகையில், தரைப்பகுதியில் மண் ஆய்வு உள்ளிட்டவை குறித்து எதுவும் கேட்காமல், கடல்பகுதி குறித்த விதிமுறைகளை மட்டுமே விதித்திருப்பதால் அச்சம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.