Cyclone Fengal PT
தமிழ்நாடு

ஆட்டம் ஆரம்பம் | கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்.. 10 மாவட்டங்களில் அதிகனமழை தொடரும்!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத்தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஃபெஞ்சல் புயலாக உருமாறியது. புயலைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர் முதலிய பல்வேறு மாவாட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

முதலில் புயலானது இன்று பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் புயல் இடம் மாறி நகர்ந்ததால் மரக்காணம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என கூறப்பட்டது.

ஃபெஞ்சல் புயல்

இந்நிலையில் மரக்காணம் அருகே புயல் கரையை கடக்கத்தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடக்கத்தொடங்கியது ஃபெஞ்சல்..

மரக்காணம் அருகே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், சற்றுநேரத்திற்கு முன்புவரை 7கிமீ வேகத்தில் மாமல்லபுரத்தை புயல் நெருங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியதாகவும், 5.30 மணியளவிலேயே புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

புயல் கரையை கடந்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் முதலிய 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னைக்கு இருந்த கனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டு மிதமான மழையே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.