நாளை தான் உருவாகும் என சொல்லப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகவிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை ‘மோன்தா’புயல் உருவாகும் எனவும், அது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது..
ஆனால் தற்போது புயல் முன்கூட்டியே உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்காக நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறியது.
இந்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை காலைக்குள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடலில் ‘மோன்தா’ புயலாக மாறும் எனவும், பின்னர் காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.
ஆனால் தற்போதைய அப்டேட்டின் படி, நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த மோன்தா புயல் முன்கூட்டியே உருவாகவிருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் எனவும், நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று, அன்றே மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மோன்தா புயல் சின்னம் சென்னையிலிருந்து 780 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.