கொரோனா தொற்று இல்லாத தாலுகாவாக மேலூர் பகுதி மாறி உள்ளதாக மேலூர் வட்டாட்சியர் சிவகாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உதினிப்பட்டி, சொக்கலிங்கபுரம், கல்லம்பட்டி, கரையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 நபர்கள் டெல்லி மாநாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த நிலையில் அவர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனையடுத்து மகாராஷ்டிரா, மும்பை, கர்நாடக ஆகிய மாநிலங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் மேலூருக்குத் திரும்பினர். அவர்களில் கர்ப்பிணிப் பெண், 5 மாத குழந்தை உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த மேலூர் பகுதிகளைச் சேர்ந்த கடைசி 5 நபர்களும் நேற்று குணமடைந்து வீடு திருப்பினர். இதனைத் தொடர்ந்து மேலூர் தாலுகாவில் கடந்த 10 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாததால், கொரோனா தொற்று இல்லாத தாலுகாவாக மேலூர் பகுதி மாறி உள்ளது என்றும் அதன் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வசித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் மேலூர் வட்டாட்சியர் சிவகாமிநாதன் கூறியுள்ளார்.