இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய சிவா திலீபன், ரயில் முன்பாய்ந்து உயிரிழந்தார். அவரது கடைசி ஃபேஸ்புக் பதிவில் 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு!' என எழுதியுள்ளார். தமிழ் உணர்வாளர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, முதல்வர் ஸ்டாலின் யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் போது ரயில் முன்பாய்ந்த மே 17 இயக்க பொறுப்பாளர் சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மார்ச் 11ஆம் தேதி சென்னை பார்க் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் இந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ரயில்முன் பாய்ந்தார்.
ஒரு வார காலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் உணர்வாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த சிவா திலீபன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்தி திணிப்பை மதிநுட்பத்தாலும், மனவுறுதியாலும், தமிழ் பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும் என்றும் என தெரிவித்துள்ளார். உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளதாகவும், யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்வதாகவும் இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிவா திலீபனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், மே பதினேழு இயக்கத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்தசூழலில் சிவா திலீபனின் கடைசி சமூகவலைதளப்பதிவு கவனம் பெற்றுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அவர் பதிவிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், ”தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு!” என பதிவிட்டுள்ளார்.