இந்திய கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரவுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை கடத்த வந்ததாக கூறி அப்பாவிகளை தாக்குவது, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. வாட்ஸ் அப் மூலமே பெரும்பாலும் வதந்திகள் பரப்பப்படுவதாக புகார் எழுந்தது. இதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. குறைந்த விலையில் டேட்டா பிளான்கள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம். செல்போனில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது ஆய்வில் தெரிவந்துள்ளது.
நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் வாட்ஸ் அப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் நகர்புறங்களில் 10 சதவீதமும், கிராமப்புறங்களில் 16 சதவீதமும் வாட்ஸ் அப் பயன்பாடு உயர்ந்துள்ளது. நகர்புறங்களில் வசிக்கும் வாட்ஸ் அப் பயனாளர்களில் 20 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் வசிக்கும் வாட்ஸ் அப் பயனாளர்களில் 38 சதவீதம் தினமும் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் பயனாளர்களில் 24 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். அதே போல் வாட்ஸ் அப் பயனாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் 18-லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் பயனாளர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே 56 வயதுக்கு மேற்பட்டவர்கள். வாட்ஸ் அப் உபயோகிப்பவர்களில் கணிசமானவர்கள் அதில் வரும் தகவல்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 29 சதவீதம் பேர் அதில் பரப்பப்படும் தகவல்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறுபவர்களே அதைப் பயன்படுத்தி பரப்புரை செய்பவர்கள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்களின் இலக்கு என்கிறது ஆய்வு முடிவு. ஸ்மார்ட் போன்களின் விலை மற்றும் டேட்டா பிளான்களின் விலை குறைந்து வருவதால் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.