தமிழ்நாடு

கோடைக்கு முன்பே வறண்டது ஏரி: விவசாயிகள் கவலை

webteam

தருமபுரி ராமாக்காள் ஏரி தண்ணீரில்லாமல் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

தருமபுரி நகராட்சியை ஒட்டி சுமார் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலத்தில் சோகத்தூர், பிடமனேரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் தருமபுரி நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வந்து நிரம்பும். இதனால் தருமபுரியை சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்சினை இல்லாமல் விவசாயம் செழிப்பாக நடைபெறும். 

எந்த காலத்திலும் தண்ணீர் வடியாமல் இருக்கும் இந்த ஏரியை நம்பி, மதிகோன்பாளையம், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டகுப்பம் அள்ளி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரிக்கு தண்ணீர் வருதில்லை. இதனால் தருமபுரி நகராட்சியில் உள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து இந்த ஏரியில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் முழுமையடையவில்லை. 

தற்பொழுது இந்த ஏரி, தண்ணீரில்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. தண்ணீரோடு, ரம்மியமாக காட்சியளித்து வந்த ஏரி, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இதனால் விவசாயம் மட்டுமில்லாமல், தருமபுரி நகராட்சி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு குடிநீர் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. 

அரசு உரிய கவனம் செலுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.