எவ்வித அறிகுறியுள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாகச் சென்னையில்தான் அதிகபட்சம் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 45 சதவீதம் பேர் உள்ளனர்.
இதனிடையே நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 88% பேருக்குத் தொற்று ஏற்பட சென்னை கோயம்பேடு சந்தையே காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி ஆகிய அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால் இந்த மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் வேகமாக நிரம்பி வழிந்தன. வார்டுகள் நிரம்பி விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “7,8,9 நாட்களைக் கடந்த கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகள் யாரெல்லாம் இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டு அனுப்பப்பட உள்ளனர்” என்று கேஎம்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்