தமிழ்நாடு

சென்னையில் கடத்தப்பட்ட அண்ணன், தங்கை திருத்தணியில் மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட அண்ணன், தங்கை திருத்தணியில் மீட்பு

webteam

சென்னையில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட அண்ணன் - தங்கை இருவரையும் சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் திருத்தணியில் மீட்டுள்ளனர்.

புதுச்சேரி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் சென்னை கோட்டூர்புரத்தில் பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரது வீட்டில் கட்டிட வேலை மற்றும் காவலாளி வேலையை குடும்பத்துடன் பார்த்து வந்தார். இவர்களுக்கு 8-வயது மகளும்,14 - வயது மகனும் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி குருமூர்த்தி வெளியில் சென்றிருந்த போது, தனது மகள் மற்றும் மகனை காணவில்லை என கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரை அடுத்து அருகில் உள்ள சி சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் சாலையோரம் நடந்துச் சென்றது உறுதியானது. 

பின்பர் ஊர் தெரியாத இருவரும் கடத்தல் கும்பல் கையில் சிக்கினார்களா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே சிறார்கள் இருவரும் நடந்துச் சென்ற சாலையை பின்தொடர்ந்து ஒவ்வொரு சிசிடிவி யாக ஆய்வு செய்த போது இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயில் ஏறி வெளியூர் சென்றது உறுதியானது. 

இதனைதொடர்ந்து அனைத்து ரயில்வே காவல் நிலையங்களுக்கும் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த சூழலில் திருத்தனி ரயில் நிலையத்தில் இருவரும் சுற்றிக் கொண்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்த போது சென்னையை சுற்றிப் பார்க்க சென்று வழித் தெரியாமல் திருத்தணி வரை இருவரும் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கோட்டூர்புரம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.