பெரம்பலூரில் ஊர்க்காவல்படையின் மண்டல தளபதி ராம்குமார் தேவதாஸ், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு சேவை மனப்பான்மையுடன் வேலை செய்து வரும் துப்புரவு பணியாளர்களை நேரில் சந்தித்து கைகூப்பி நன்றியை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணியில் காவல்த்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை என அரசு துறைகள் அனைத்தும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஓய்வின்றி செயலாற்றி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு துணையாக, 188 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, வாகன சோதனை, நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களை ஒழுங்குபடுத்தல் என அன்றாடம் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஊர்க் காவல்படையினர்.
கோடை வெயிலிலும், கொரோனா பயத்திலும் பொதுமக்கள் முடங்கிபோயிருக்கும் காலத்தில் காவல்துறைக்கு துணையாக இவர்கள் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியமே என்றாலும் தங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து ஊர்க்காவல் படையினர் இரவு பகல் என்று பாராமல் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி ராம்குமார் தேவதாஸ், தற்போதுள்ள அசாதாரண சூழலில் ஊர்க்காவல்படைன் பாதுகாப்பு பணியின் அவசியத்தை எடுத்துரைத்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
மேலும் 188 பேருக்கும் தினமும் க்ளுக்கோஸ், பிஸ்கட், தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை சொந்த செலவில் வாங்கிகொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் அவர்களின் மண்டலதளபதி. இது தவிற சுகாதாரப்பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இதே போன்று ஊர்க்காவல்படை சார்பில் வழங்கி அவர்களது சேவைப்பணிக்கு கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்து வருகிறார்.
குறைந்த ஊதியமே என்றாலும் வெயில், மழை பாராது, கொரோனா அச்சம் கொள்ளாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊர்காவல்படையினரும், எந்தவித எதிர்பார்பின்றி தங்களையும் இணைத்துக் கொண்ட தன்னார்வ இளைஞர்களும், காவலர்களும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் துப்புரவாளர்களின் செயல்களும் பாராட்டுக்குரியதே!