தூத்துக்குடி கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ராஜா, சுமைதூக்கும் தொழிலாளி தந்தை, தீப்பெட்டி தொழிலாளி தாயின் துன்பங்களை தாண்டி, கபடியில் இருந்து பளுதூக்குதலுக்கு மாறி, சாய் விடுதி பயிற்சி, ரயில்வே வேலை என முன்னேறி, கிளாஸ்கோ காமன்வெல்த் 65 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று குடும்பத்தின் கனவை நனவாக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி - பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன் ராஜா ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ராஜா வெள்ளிபதக்கம் வென்று உள்ளதால் அவரது குடும்பத்தினர் மற்றும் கோவில்பட்டி சங்கலிங்கபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுள்ளனர். ராஜாவின் பெற்றோர் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலன் கிடைத்துவிட்டதாக கண்ணீர் சிந்தினர். வறுமையை வென்ற ராஜாவின் கடந்துவந்த பாதையை இங்கே பார்க்கலாம்..
ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய சகோதரர் (அண்ணன்) சுரேஷ்குமார் பளுதூக்கும் வீரர். மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா மற்றும் அவருடைய சகோதரர் சுரேஷ்குமார் இருவரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர். இவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர்.
ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க, அவருக்கு மயிலாடுதுறையில் உள்ள சாய் விளையாட்டு விடுதியில் இடம் கிடைத்துள்ளது. அங்கும் சென்று கடுமையான பயிற்சிகளை பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த ராஜாவுக்கு பெரம்பூர் ரயில்வேயில் பணி கிடைத்தது.
2018-ல் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடம் பிடித்தார் ராஜா. 2022ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று தன்னுடைய வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளார் ராஜா.
கோவில்பட்டியிலிருந்து சென்று உலக அரங்கில் சாதித்திருக்கும் ராஜாவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு அவருக்கு 30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
ஏழை பெற்றோரின் கனவு பலித்தது
மகன் ராஜாவின் வெற்றி குறித்து ஆனந்த கண்ணீருடன் பேசிய பெற்றோர், தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், தங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியாத இருப்பதாகவும் தெரிவித்தனர். கபடி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தனது மகன் ஜிம்மிற்கு சென்றார்.. அங்குள்ள பயிற்சியாளர்கள் பளுதூக்கும் பயிற்சி செய்தால் நிச்சயமாக ஒரு நல்ல இடத்திற்கு வர முடியும் என்று கூறியதால் எனது மகனுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. அவனின் ஆர்வத்தைக் கண்டு நாங்களும் கஷ்டத்தை பார்க்காமல் கூலிவேலை செய்து அந்தப் பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம். 2018, 2022ல் காமன்வெல்த் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெற முடியவில்லை தற்போது வெற்றி பெற்று வெள்ளி வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர். ராஜாவின் தாய் மகனின் வெற்றியை பற்றி பேசுகையில் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
அவருடைய சகோதரர் சுரேஷ்குமார் கூறுகையில், தன்னுடைய தம்பியின் தொடர் முயற்சி காரணமாக வெள்ளி பதக்கம் வென்றுள்ளதாகவும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய லட்சியம் என்றார்.
குருவுக்கு கிடைத்த பெருமை
வெள்ளி பதக்கம் வென்ற ராஜாவிற்கு முதன் முதலில் பயிற்சியாளராக இருந்த சொர்ணமுத்து கூறுகையில், நானும் ஒரு பளுதூக்கும் வீரர் தான், 1999ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று உள்ளேன். சங்கிலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பல வீரர்கள் பளுதூக்கும் போட்டியில் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் எனது மாணவர் ராஜா முத்துப்பாண்டியும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மேலும் அவர் வெற்றி பெற வேண்டும்.
கோவில்பட்டிபகுதியில் ஏராளமான பளுதூக்கும் வீரர்கள் உள்ளனர். எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜிம் அமைக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அவ்வாறு அமைக்கப்பட்டால் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள். பதக்கங்களை வெல்வார்கள் என்ற கோரிக்கையையும் வைத்தார்.