நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005 வரை வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என ரூ. 66,22,436 அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை ஆணையர் 2014 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது. 50 லட்சத்துக்கு குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடி ரூபாய் என மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
2014ஆம் ஆண்டு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதை அனுமதித்து, வருமான வரித்துறையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.