காரைக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு பதில், மாற்று ரத்தம் வழங்க வலியுறுத்தி அவரை டிஸ்சார்ஜ் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகேயுள்ள பெத்தாச்சி குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. 3 மாத கர்ப்பிணியான இவர், ரத்தக்குறைவாக இருந்த காரணத்தினால் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பதில் மாற்று ரத்தம் கொடுக்க வேண்டும் என பாண்டிச்செல்வியின் குடும்பத்தினரிடம் செவிலியர் ஒருவர் கூறியுள்ளார். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்ய முடியாததால், 3 நாட்களாக பாண்டிச்செல்வியை டிஸ்சார்ஜ் செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தர்மரிடம் கேட்டபோது, அரசின் வழிமுறைகளை மீறி நோயாளியிடம் கடுமையாக நடந்துகொண்ட செவிலியர் மேகலா மீது, துறைரீதியான விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.