தமிழ்நாடு

காற்றின் ஒப்பு ஈரப்பதம் 2 மடங்கு உயர்வு: உடல் வெப்பம் தணிப்பதில் கவனம் அவசியம்!

காற்றின் ஒப்பு ஈரப்பதம் 2 மடங்கு உயர்வு: உடல் வெப்பம் தணிப்பதில் கவனம் அவசியம்!

JustinDurai

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் ஒப்பு ஈரப்பதத்தின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 32 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் நிலையில், இந்த வருடம் 36ல் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

வடமேற்கு பகுதிகளான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வருவதால், ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காற்றின் ஒப்பு ஈரப்பத்தின் அளவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. ஒப்பு ஈரப்பதம் என்பது காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவைக் குறிக்கிறது. ஒப்பு ஈரப்பதத்தின் அளவு சராசரியாக 40 - 60 என இருக்கும். ஒப்பு ஈரப்பதம் உடல் வெப்பத்தை குறைய விடாது. ஒப்பு ஈரப்பதத்தின் அளவு 30 - 50 வரையே இருக்க வேண்டும்.

ஒப்பு ஈரப்பதத்தின் அதிகரிப்பால் வெப்பநிலை உயர்வு மட்டுமின்றி உடலின் நீர்ச்சத்து விரைவில் வெளியேற்றப்பட்டு வறண்டுபோகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெளியே செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிவதும், பருத்தியால் ஆன கைக்குட்டைகளை பயன்படுத்துவதும் நன்மை தரும். வெளியில் புறப்படும்போது குடையும் தண்ணீர் பாட்டிலும் மறக்காமல் கொண்டு செல்லுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்துகின்றனர்.