தமிழ்நாடு

மேற்கு மண்டலத்தில் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் - சுகாதாரத்துறை செயலாளர்

kaleelrahman

கொரோனா பரிசோதனை முகாமில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவதால் அந்த பகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை ஆயிரத்துக்குள்ளாக இருந்த தொற்று எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில்1,492 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா கொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7582 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது... சேலம் மாவட்டத்தில் பரிசோதனை மையங்களில் பணியாற்றும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக முடிவுகள் வெளியிட முடியவில்லை. வெளியிடப்படாத அந்த முடிவுகளுடன் சேர்த்து இன்றைய பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டதால் எண்ணிக்கை கூடியுள்ளதாக தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்தில் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும், இனிவரும் நாட்களில் மேற்கு மண்டலத்தில் பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.