தமிழ்நாடு

ஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்

ஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்

rajakannan

கிட்னியை தானமாக தந்தால் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் இணையதள மோசடிக் கும்பல் 6 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க மனித உடல் ஒவ்வொன்றாக கூறுபோட்டு விற்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கள்ளச்சந்தையில் உடல் உறுப்புகளின் விலைப்பட்டியல் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

நீங்கள் ஆரோக்கியமான மனிதரா? அப்படியென்றால் உங்களின் விலை கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய். கச்சா எண்ணெய் மட்டுமல்ல மனித உறுப்புகளுக்கான விலையும் அமெரிக்க டாலர்களில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. உடல் உறுப்புகளின் தேவையைப் பொறுத்து சர்வதேச சந்தையில் அதன் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. 

சர்வதேச கள்ளச்சந்தையில் ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய். சிறுநீரகம் பத்து லட்சம் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. கல்லீரலின் விலை 90 லட்சம் ரூபாய். இதயத்தின் விலை 80 லட்சம் ரூபாய். ஒரு ஜோடி கண்களின் விலை15 லட்சம் ரூபாய். எலும்பு மஜ்ஜை ஒரு கிராம் 15 லட்சம் ரூபாய், கருமுட்டை 8 லட்சம் ரூபாய். எலும்புக்கூடு 5 லட்சம் ரூபாய்க்கும், சிறு எலும்புகள் மற்றும் தசைநார்கள் 4 லட்சம் ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ரத்தம் 44 ஆயிரம் ரூபாய்க்கும், தோல் ஒரு சதுர சென்டிமீட்டர் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

ஆனால் இந்தத் தொகை உறுப்பை தானம் கொடுப்பவருக்கு கிடைப்பதில்லை. உறுப்புக்கு உரியவருக்கு சொற்ப தொகையை கொடுத்துவிட்டு கொள்ளை லாபம் பார்ப்பது மருத்துவ மாஃபியாக்கள்தான். பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள்தான் மாஃபியாக்களின் முதல் சாய்ஸ். உறுப்புகளுக்காக மனிதர்களை கடத்திக் கொலை செய்யும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன. மருத்துவமனைகளில் எளியவர்களின் உறுப்புகள் எளிதாக திருடப்படுகின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, பிரேசில் போன்ற நாடுகள் உடல் உறுப்புகள் விற்பனையில் முன்னணியில் உள்ளன. உடல் உறுப்புகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் வாங்குகின்றன. மனித கசாப்புக்கடையில் அனைத்தையும் நிர்ணயிப்பது பணம்தான். அனைத்து நிலைகளிலும் எளியவர்களின் பெரும்பகுதி உரிமைகள் எப்போதோ பறிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய உடலையாவது விட்டு வையுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கை. இது ஒருபுறம் இருக்க தானம் கொடுக்கப்படும் உறுப்புகள் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், “ஹிதேந்திரன் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் கொடுத்த பிறகு தான் தமிழகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகளவில் நடைபெற வேண்டும் என்பது தான் ஹிதேந்திரன் பெற்றோரின் வேண்டுகோள்” என்றார்.