மண்ணச்சநல்லூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவனே மனைவியைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள வடக்கு ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் பாலசந்தர் (39). இவருக்கும் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கோதர்சன், சிவகார்த்தி என்ற இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின் பாலசந்தர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தான் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தினை மனைவிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய அவர் தற்போது அப்பகுதியில் உணவு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தன் மனைவியிடம் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்ட போது அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனைவி மகாலட்சுமி மீது கணவன் பாலசந்தர் சந்தேகமடைந்துள்ளார். மேலும் கணவன் மனைவிக்கிடையே தொடர்ந்து சண்டை நிலவி வந்ததுள்ளது.
இந்நிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே இன்று மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவி மகாலட்சுமி கழுத்தில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இந்தக் கொலை தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மகாலட்சுமியின் உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய பாலசந்தரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வெட்டிக் கொலை செய்த சம்பவம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.