தமிழ்நாடு

கஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு வீடு - ரஜினி மக்கள் மன்றம்

கஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு வீடு - ரஜினி மக்கள் மன்றம்

webteam

கஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து கஜா புயல் நிவாரணமாக பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி, பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்றம் மூலமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில், கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒன்றரை மாத காலமாக தொடர்ந்து நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.

கஜா புயலால் குடிசை வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித்தர நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவக் கிராமங்களில் குடிசை வீடுகளை முற்றிலுமாக இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தலா ரூ. 1,50,000 செலவில் சிமெண்ட் பூச்சு கொண்ட ஓட்டு வீடுகளை கட்டித்தர முடிவு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஜினியின் விருப்பப்படி இரண்டு மாத காலத்திற்குள் பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கட்டித் தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.