தமிழ்நாடு

உரிய சிகிச்சையின்றி நோயாளி இறந்ததாக குற்றச்சாட்டு : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

webteam

ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனை உரிய சிகிச்சையளிக்கவில்லை என உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சோகை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சளிக் காய்ச்சல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள் ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கடந்த சில தினங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்காக ரூ.7.50 லட்சம் வரை பணம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. சிகிச்சையின் இறுதியில் ஆறுமுகம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் உறவினர்கள், ஆறுமுகத்துக்கு மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக தகவலானது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் மருத்துவரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து ஆறுமுகத்தின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.