தமிழ்நாடு

நாகையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

webteam

நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

கடந்த முறை முதலமைச்சர் மேற்கொண்ட கஜா புயல் ஆய்வுப் பயணம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். நேற்று காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்தில் அவர் ஆய்வை தொடங்கினார். 

முதற்கட்டமாக நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரன் இருப்பு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முகாமில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு அதன் தரத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மின் ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். 

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.