கோயில் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு இந்து சமய நிலைத்துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அதன்படி நாடு முழுவதிலும் உள்ள கோயில்களும் அதனை சார்ந்த துணை அலுவலகங்களும் மூடப்பட்டன.
இதனிடையே மத்திய உள் துறை அமைச்சகம், மே 17 வரை ஊரடங்கு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. தளர்வுகள் குறித்த முடிவுகளை அந்தந்த மாநிலங்களே சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோயில் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு இந்து சமய நிலைத்துறை அனுமதி அளித்துள்ளது. அதில் “ அனைத்து திருகோயில்களிலும் வெளித்துறை பணியாளர்கள் 33 சதவீதம் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். உள் துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணியாற்ற வேண்டும்.
அவர்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம். அலுவலகத்தில் கிருமி நாசினி கண்டிப்பாக இருக்க வேண்டும். சளி, இருமல் உள்ள பணியாளர்களையும், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணியாளர்களையும் அனுமதிக்கக் கூடாது. திருக்கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்ற யாரையும் அனுமதிக்கக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.