செந்தில் பாலாஜி - உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி - உச்சநீதிமன்றம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” - உச்ச நீதிமன்றம்

ஜெனிட்டா ரோஸ்லின்

அமலாக்கத்துறையின் வழக்கில் சிறைசென்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்து. அங்கு அது தள்ளுபடியான நிலையில் இதனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் மனுதாரர்கள். இவ்வழக்கினை இன்ரு விசாரித்த உச்சநீதிமன்றம், “ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், “ஒரு அமைச்சர் அமைச்சரவையில் அமைச்சராக தொடர வேண்டுமா, இல்லையா என்பதையெல்லாம் அந்த அமைச்சரவையின் தலைவராக இருக்க கூடிய அம்மாநில முதல்வர்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே இதில் ஆளுநர் தலையிட முடியாது. நீதிமன்றமும் தலையிட முடியாது. அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை சரியானதே” என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதில் மனுதாரர் வாதிடுகையில், “உயர்நீதிமன்றம், அரசுக்கு சில விஷயங்களை முன்னிறுத்தியது. அதனை முதலமைச்சர் கருத்தில் கொள்ளவில்லை” என்றனர். ஆனால் இதுகுறித்த எந்த விவாதங்களும் நீதிபதிகளால் நடத்தப்படவில்லை.

முன்னதாக கடந்த ஜீன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு எடுத்து விசாரிக்கப்பட்டு பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மத்தியில் ‘குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் வைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா, இல்லை முதல்வருக்கு உள்ளதா?’ என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். பின் சில மணி நேரத்திற்குள் அவரே அந்த உத்தரவினை பின்வாங்கினார்.

இதையடுத்து ஆளுநரின் உத்தரவினை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம்’ என்றார். முதல்வரின் இந்த உத்தரவினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், “அமைச்சரை பதிவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முதலமைச்சருக்குதான் அதிகாரம் உண்டு” என்றனர். அதன்பின்னர் உச்சநீதிமன்றம் சென்றது வழக்கு. அங்கு அது இன்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.