தமிழ்நாடு

பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

webteam

தமிழகத்தில் கடந்த 20ம் தேதி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தில் தமிழக அரசு கட்டணக் குறைப்பை அறித்துள்ளது.

பெரும்பான்மையான மக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பேருந்துகளில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசுப் பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும், குளிர்ச்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்புற பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் 1 ரூபாய் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தினால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என உத்தேசிக்கப்ட்டிருந்ததாகவும், தற்போது பேருந்து கட்டண குறைப்பால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.