தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மூலம் அரசுக்கு ரூ.10.80 கோடி வருவாய்

பொங்கல் சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மூலம் அரசுக்கு ரூ.10.80 கோடி வருவாய்

webteam

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு மூலம் மட்டும் அரசுக்கு‌ 10 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தை மாதத்தின் முதல்நாளை பொங்கல் பண்டிகையாக, மக்கள் கொண்டாடி வருகின்றனர். முந்தைய நாளான போகிப் பண்டிகையில் தொடங்கி பிறகு தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

விவசாய பெருமக்கள் உழவர் திருநாளான மாட்டுப் பொங்கல் அன்று உழவு மாடுகளை நீரோடைகளில் குளிக்க வைத்து, மஞ்சள் பூசி, மாலையிட்டு கொண்டாடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் இப்பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்டு போவர். பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் ஏறி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். ஆகவே சென்னை மாநகரமே அதிக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.

கடந்த 10-ஆம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 15 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்‌களுக்கு செல்வதற்காக 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதன் மூலம் அரசுக்கு 10 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.