கந்தசஷ்டி விவகாரத்தில் பாஜக யாத்திரை நடத்தியது போல், தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பாஜக ஏதாவது பெரிய யாத்திரை நடத்துவார்கள் என்ற பயத்தில் முதல்வர் ஸ்டாலின் பின்வாங்கி விட்டதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
சென்னை காசிமேட்டில் உள்ள பைபர் படகு நிறுத்தும் இடத்தை மேம்படுத்தி மீனவர்களுக்கு கொடுப்பது தொடர்பாக சென்னை துறைமுக அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எல்.முருகனிடம் தருமபுரம் ஆதீனம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
”தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மூக்கை நுழைக்க நினைத்தார். தடை என்ற அவரது முயற்சிக்கு இந்து இயக்கம் மற்றும் பாஜக பயத்தை கொடுத்து விட்டனர். ஏற்கனவே கந்தசஷ்டி விவகாரத்தில் பாஜக யாத்திரை நடத்தியது போல் தற்போது இதற்கு ஏதாவது பெரிய யாத்திரை நடத்துவர்கள் என்ற அச்சத்தில் முதலமைச்சர் பயந்து பின்வாங்கி விட்டார். இந்த ஆண்டு மட்டும்தான் தடையை நீக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். வேண்டும் என்றால் அடுத்த வருடம் தடுத்து பார்க்கட்டுமே” என்று எல்.முருகன் கூறினார்.