திருச்சி திருவானைக்காவல் கோயிலில் கிடைத்த தங்கப் புதையல், அரிய வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள திருவானைக்காவலில் சோழர்கால கட்டுமானமான ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. செங்கோட்சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மூலவரான ஜம்புகேஸ்வரர் உள்ள இடத்தில் நீர் சுரந்து கொண்டே இருக்கும். வெயில் காலத்திலும் நீர் சுரக்கக்கூடிய அமைப்புள்ள இந்த கோயில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த கோயிலின் அன்னதானக் கூடத்திற்கு பின்புறமுள்ள வில்வமரம் அருகே பூங்கா அமைப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மண்ணுக்கு அடியில் சிறிய செம்பினால் ஆன உண்டியல் ஒன்று தென்பட்டது. அதனை எடுத்து பார்த்தபோது உள்ளே சிறிய வட்ட வடிவிலான நாணயங்கள் இருந்தன. அவற்றை சோதித்தபோது அத்தனையும் தங்க நாணயங்கள் என்பது தெரியவந்தது.
அதில் சுவாமி உருவம் பொறித்த 504 சிறிய தங்கக் காசுகளும், சற்றுபெரிய அளவிலான ஒரு காசும் இருந்தன. இவற்றின் மொத்த எடை ஆயிரத்து 716 கிராம். முகலாய படையெடுப்புக்குப் பின் இந்த நாணயங்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தங்க நாணயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று வருவாய்த் துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்த நாணயங்கள் அடுத்து தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தங்கப் புதையல் குறித்த ஆய்வு, புதிய வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.