சென்னை திருவல்லிக்கேணியில் மந்திரவாதி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என கருதப்படும் பெண், மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உண்மையிலேயே மன நலம் பாதிக்கப்பட்டவரா அல்லது கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி டி.ஹெச். சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் தரைத்தளத்தில் முதியவர் சையது பஷீர் உதின் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் சுமார் பத்து பேர் இருந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் பர்தா அணிந்தபடி கையில் பையுடன் வந்துள்ளார். முகத்தை மூடியிருந்த துணியை அகற்றிய அவர் சையதிடம் ஏதோ பேசியுள்ளார். அந்தப்பெண் உருது மொழியில் பேசியதால் அங்கிருந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை எடுத்து சையதின் முகத்தில் வீசி தீ வைத்துள்ளார் அந்தப் பெண்.
முகம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சையது அலறியுள்ளார். உடனடியாக பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு அந்தப்பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து சையதை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி சையது உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் கொலையை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நிகழ்விடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டன. ஜாம்பஜாரைச் சேர்ந்த நவீன்தாஜ் என்ற பெண், சையதை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது நவீன்தாஜ் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொலை நடந்த 11 மணிநேரத்தில் நவீன்தாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் சாதிக் பாட்ஷா மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர், நவீன்தாஜை மனநல மருத்துவமனையில் அனுமதித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன்தாஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது உறவினர்கள் கூறியதாக தெரிகிறது. ஏற்கெனவே அவருக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான மருத்துவ ஆவணங்களைத் தர அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நவீன்தாஜ் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா ? இல்லை கொலைக்குற்றத்தில் இருந்து தப்புவதற்காக மனநல மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடுகிறாரா ? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக நவீன்தாஜின் மனநலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மருத்துவர்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த அறிக்கை கிடைத்த பிறகே நவீன்தாஜின் மனநலம் குறித்து தெரியவரும். இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.