தமிழ்நாடு

செங்குட்டை பகுதியில் கண்டறியப்பட்ட காயம்பட்ட ஒற்றை யானை.. மீட்பு பணியில் வனத்துறையினர்!

webteam

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க டிரோன் பறக்க விட்டு தேடிவந்த வனத்துறையினர், செங்குட்டை பகுதியில் யானை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கோவை அருகே உடல் நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை தர மூன்று கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும், யானைக்கு சத்து மாத்திரை, வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை அளிக்க தயார் நிலையில், இருந்த போது யானை காட்டிற்குள் சென்றதால் யானையை டிரோன் உதவியுடன் 11 குழுக்கள் அமைத்து வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.

தமிழ்நாடு கேரளா எல்லையில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது. யானைகள் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளுக்குள்ளாக மாறி மாறி வலசை சென்று உணவு உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் காலை சீங்குளி என்ற பழங்குடி கிராமத்துக்கு வந்த ஒற்றை காட்டுயானை உடல் நலம் பாதிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்த நிலையில் பழங்குடி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கேரள தமிழக எல்லையில் யானை இருந்ததால் சிகிச்சை அளிக்க தாமதமாகியது. இந்த நிலையில் யானை காட்டிற்குள் சென்றதனால் ட்ரோன் பறக்கவிட்டு யானையை வனத்துறை தேடினர். தமிழ்நாடு கேரளா எல்லை என்பதனால் தமிழ்நாடு வனத்துறையிலிருந்து 5 குழுக்களும், கேரளாவிலிருந்து 4 குழுக்களும் ஒன்றிணைந்து காட்டுக்குள் சென்ற யானையை தேடினர். ஒருநாள் முழுக்க தேடியும் இரவு வரை யானை தென்படவில்லை.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று கூடுதல் ஏற்பாடுகளுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் ஒற்றை யானையை ட்ரோன் கேமராக்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையை விரைவில் பிடிக்க 5 குழுக்கள் 7 குழுக்களாக விரிவு செய்யப்பட்டு 7 கிலோ மீட்டர் சுற்றளவில் யானையைத் தொடர்ந்து தேடி வந்தனர். 

உடல் நலம் குன்றிய அந்த காட்டு யானை ஆக்ரோஷமாக இருப்பதால் யானையை நெருங்கி சிகிச்சை தர கலீம் கும்கி யானை வரவழைக்கப்பட்டது. மேலும் காட்டுக்குள் உடல் நலம் குன்றிய யானை மட்டுமின்றி இரண்டு யானைகள் கூடுதலாக உலா வந்ததை முதல் நாள் தேடுதலில் வனத்துறையினர் பார்த்ததனால் உடல் நலம் குன்றிய யானையை அடையாளம் காண புகைப்படம் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கலீம் கும்கி மட்டுமின்றி கூடுதலாக முத்து என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, கேரளா வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து 11 குழுக்களாக காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனைகட்டியிலிருந்து காரமடை செல்லும் சாலையில் உள்ள காலன்புதூர் பகுதியில் யானை நடமாட்டம் நேற்று இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து வனத்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைவான தேடுதல் பணியில் ஈடுபட்ட வந்தனர்.

மேலும் செங்குட்டை பகுதியில் யானை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செங்குட்டை பகுதியில் யானை இருப்பது டிரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சியில் தெரியவந்துள்ளது.