தமிழ்நாடு

ரசாயன ஆலையால் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்

ரசாயன ஆலையால் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்

webteam

தூத்துக்குடியில் ரசாயன ஆலையால் மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான நீண்ட கடற்கரையை கொண்டது, அப்பகுதியில் அவ்வப்போது கடலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடற்கரை பகுதியில் ஏராளமான மீன்கள் உயிரிழந்த நிலையில் ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி அருகே முள்ளகாட்டை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏராளமான மீன்கள் உயிரிழந்த நிலையில், தற்போது  இப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மீன்கள் கரை ஒதுங்கி உள்ளது மீனவர்களை கவலைக்கு உண்டாக்கியுள்ளது. தூத்துக்குடி கடற்பகுதியில் அதிகமாக காணப்படும் ஊளி, கீழி, மூஞ்சான், பாறை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. 

இது குறித்து அப்பகுதி மீனவர் ராயப்பன் கூறும்போது, “கோவளம் கடற்பகுதியில் கடலோர மேலாண்மை அல்லது சுற்றுச்சூழல் துறையின் அனுமதியினை பெறாமல் டாக் தொழிற்சாலை கழிவுகளும் ஸ்பிக் ஆலைகளின் கழிவுகளும் குழாய் மூலம் கடலில் கலக்கப்படுவதால் மீன்கள் செத்து கரை ஒதுவங்குவது தொடர்கதையாக மாறிவருகிறது. மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிடில் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார். 

கோவளம் பகுதி மீனவர் முனியசாமி கூறுகையில், நஞ்சுத்தண்ணியை கடலில் கலப்பதால் மீன்கள் உயிரிழந்து வருவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.