தமிழ்நாடு

கோடிகள் குவியும் மொய் விருந்து விழா தொடங்கியது !

webteam

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழா தொடங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் பரவி, தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தற்போது தொடங்கியுள்ள மொய் விருந்து விழா, அதனை சுற்றிய பகுதிகளான அணவயல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு சேந்தன்குடி குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் வரும் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் வரை நடைபெறும். கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் பணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வசூலாகும் மொய் தொகையின் விகிதாச்சாரம் குறையும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தற்போது கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்து களைகட்டத் தொடங்கி உள்ளது. வீடுகள் தோறும் மொய் விருந்து அழைப்பிதழ்கள் குவிய தொடங்கியுள்ளன. மேலும் மொய் விருந்து பேனர்கள் ஆங்காங்கே பளபளக்க தொடங்கிவிட்டன. மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கறி விருந்தும் பரிமாறப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்த மொய் விருந்து விழாக்களால் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டைப் போல்  இந்த ஆண்டு மொய் விருந்தில் எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டாலும் 250 கோடி முதல் 400 கோடி வரையில் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் மொய்விருந்துக்கு பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் : முத்துப்பழம்பதி,செய்தியாளர் - புதுக்கோட்டை