சென்னை பூவிருந்தவல்லியில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை காப்பாற்ற தந்தை கதறிய காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், தனது 18 வயது மகன் சாய் சந்தோஷ் உடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பின்னால் வேகமாக வந்த லாரியிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை சந்திரசேகர் திருப்பியுள்ளார். அப்போது சாய்சந்தோஷ் மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்தார். தந்தை சந்திரசேகர் பாலத்திலேயே கீழே விழுந்தார். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சாய் சந்தோஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து பதறி ஓடிவந்த தந்தை, மகனை வாரி அணைத்து கதறினார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கலங்கவைத்தது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சாய் சந்தோஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.