கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மகனுடன் சேர்ந்து ஒருவரை வெட்டிக் கொன்றதாக தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லைமாவட்டம் மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் திருமலை நம்பி. கூலி தொழிலாளியான இவரது மகளை மணமுடிக்க கேட்டு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அஞ்சுகிராமம் வந்த திருமலை நம்பியை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வைத்து சுயம்பு லிங்கமும் அவரது தந்தை செம்புகுட்டியும் அரிவாளால் வெட்டினர்.
இதில் இருந்து தப்பிக்க முயன்ற திருமலைநம்பியை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆராசிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இது தொடர்பாக செம்புக்குட்டியை கைது செய்து விசாரணை செய்துவரும் போலீசார் தப்பி ஓடிய சுயம்புலிங்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.