பிரபல எஸ்என்ஜி மதுபான குழுமத்தில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் எஸ்என்ஜி மதுபான ஆலையும் ஒன்று. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த ஆலை மதுபானங்களை சப்ளை செய்து வருகிறது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் எஸ்என்ஜி ஆலையிலிருந்து மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆலையின் உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னை நந்தனத்தில் உள்ள மதுபான ஆலை அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர், 2-வது நாளாக சோதனையை தொடர்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களின் தயாரிப்பாளராக இருந்தவர் ஜெயமுருகன். கடந்த 2019ஆம் ஆண்டும் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றபோது, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.