தமிழ்நாடு

புது ஷவர்.. புது பாத் டப்.. ஆனந்த குளியல் போடும் வண்டலூர் zoo யானைகள்..!

JananiGovindhan

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கான புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ரோகிணி, பிரக்ருதி ஆகிய யானைகள் ஷவர் மற்றும் நீச்சல் டப்பில் ஆனந்த குளியல் போட்ட வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரபல நிறுவனமான ரெனால்ட் நிசான் தொழில்நுட்ப மற்றும் வணிக நிறுவனத்தின் CSR நிதி கொண்டு வண்டலூர் பூங்காவில் உள்ள 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட யானைகளின் இருப்பிடம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, யானைகளுக்கான கிரால் கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டிருக்கிறதாம்.

மேலும் யானைகள் ஆனந்தமாக குளிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் தொட்டி, ஷவர் போன்றவை புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, இரண்டு ஏக்கர் அளவில் தீவன தோட்டமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் யானைகளின் இருப்பிடங்களில் இருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு அகழியும் ஆழப்படுத்தப்பட்டதோடு, யானைகளுக்கு உணவு சமைப்பதற்காக சமயலறையம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 

யானைகளின் வசதிக்காக புதுப்பிக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ரெனால்ட் நிசான் நிறுவன சமூக பொறுப்பு நிதி (corporate social responsibility) துணைத் தலைவர் ராமகிருஷ்ணா மற்றும் பூங்கா இயக்குநர் சீனிவாஸ் ஆகியோர் நேற்று (டிச.,07) திறந்து வைத்திருக்கிறார்கள்.