கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜை, சிறைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவர்களை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.
டெல்லியில் கைது செய்யப்பட்டபின், சென்னை அழைத்துவரப்பட்ட இருவரும், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரின் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் குறித்து, நீதிபதி சரிதா, அரசு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகார்தாரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்றும், இவர்களின் பேட்டியால் எங்கு கலவரம் உருவானது, அரசுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் என்ன என்று சரமாரி கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை திருப்தியளிக்காததால் அவர்களை சிறைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட், அதுகுறித்து மத்திய குற்றப்பிரிவுக்கு எழுத்துப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு 11.30 மணியளவில், மாஜிஸ்திரேட் சரிதா இல்லத்தில், சயான், மனோஜ் ஆகியோரை காவல்துறையினர் மீண்டும் ஆஜர்படுத்தினர். அங்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞரின் விளக்கங்களை ஏற்காத நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களை விடுத்த நீதிபதி, இருவரையும் வரும் 18ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சயான், “காவல்துறையின் விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
தன்னை அவமானப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாக பத்திரிகையாளர் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது முதல்வர் பழனிசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், உடனடியாக டெல்லி விரைந்து, குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.