அண்ணாமலை, அமலாக்கத்துறை pt web
தமிழ்நாடு

'அரசு வேலைக்கு லஞ்சம்'|விவாதம் ஆன ED கடிதம்.. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்.. கே.என்.நேரு மறுப்பு!

அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கடினமாக உழைத்த பல இளைஞர்களின் கனவுகளை தமிழக அரசு நசுக்கிவிட்டதாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

PT WEB

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரியுள்ளார். மேலும், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கடினமாக உழைத்த பல இளைஞர்களின் கனவுகளை தமிழக அரசு நசுக்கிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் 2538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

அதில், ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்களும் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, 2025 ஆகஸ்டில் குறைந்தது 150 தேர்வர்ளுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 2,538 பணியிடங்களான உதவி பொறியாளர்கள், நகர திட்டமிடல் அதிகாரிகள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அமைச்சர் கே. என் நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த முறைகேடு தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளது.

அண்ணாமலை விமர்சனம் !

இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதம் தொடர்பான செய்தியைச் சுட்டிக் காட்டி பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணமாலை எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கடினமாக உழைத்த பல இளைஞர்களின் கனவுகளை தமிழக அரசு நசுக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் வேலைக்காக விண்ணப்பித்த நிலையில், 35 லட்சம் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதித்துறையின் நேரடியான கண்காணிப்பின் கீழ், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சனம் செய்து எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி அவர்கள் இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி. அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்“ எனக் குறுப்பிட்டுள்ளார்.

”முறைகேடு நடைபெறவில்லை” - நகராட்சி நிர்வாக துறை சார்பில் விளக்கம்.,

நகராட்சி நிர்வாக துறையில் 2ஆயிரத்து 538 உதவி செயற்பொறியாளர்கள் நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அத்துறையின் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை எவ்வித கடிதத்தையும் தங்களுக்கு அனுப்பவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். சம்பந்தப்பட்ட தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், அது குறித்து தேர்வர்களிடம் விசாரித்தாலே உண்மை உறுதியாகும் என்றும் கார்த்திகேயன் ஐஏஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

கே.என் நேரு

கே.என் நேரு மறுப்பு !

அமலாக்கத்துறையின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அதில், “ நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நகராட்சி நிர்வாகத் துறையில் முறையாக அறிவிக்கை வெளியிடப்பட்டு ஒளிவுமறைவற்ற முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நியமனம் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்தக் கடிதம் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும். மேலும், அமலாக்கத்துறையின் கருத்திற்கு சட்டப்பூர்வமான வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.