தமிழ்நாடு

இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்

இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்

webteam

திருவண்ணாமலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், அப்பெண்ணைக் கொலை செய்து தாலி கட்டிய இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காளிகாபுரம் பகுதியை‌ சேர்ந்த சிவராமன் - சாமுண்டீஸ்வரி தம்பதியின் மகள் நிர்மலா. திருவண்ணாமலை அரசு கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரை ‌அவரது ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அன்பழகன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பலமுறை நிர்மலாவின்‌ தந்தையிடம் அன்பழகன் பெண் கேட்டிருக்கிறார். படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு நிர்மலாவின்‌ இல்‌லத்திற்கு சென்று‌ அன்பழகன் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு தற்போது முடியாது, படித்து முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என நிர்மலாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

விடுமுறையில் நிர்மலா வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த அன்பழகன் நள்ளிரவில் அவர் வீட்டிற்கு சென்று அங்கு உறங்கி கொண்டிருந்த நிர்மலா மற்றும் அவரது தாயார் சாமுண்டீஸ்வரி ஆகியோரின் முகத்தில் தலைய‌ணையை வைத்து அழுத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதை‌த்தடுக்க வந்த நிர்மலாவின் தந்தை சிவராமனை கத்தியால் வெட்டியுள்ளார்.

பின்னர் நிர்மலாவின் சடலத்திற்கு தாலி கட்டிய அன்பழகன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, படுகாயமடைந்திருந்த நிர்மலாவின் தந்தை சிவராமனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த சந்தவாசல் காவல்துறையினர், கொல்லப்பட்ட நிர்மலா, அவரது தாயார் சாமுண்டீஸ்வரி, தற்கொலை செய்து கொண்ட அன்பழகன் ஆகியோரது சடலங்களை மீட்டனர்.