'ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி' என குன்றத்தூரில் நடைபெற்ற தெய்வ சேக்கிழார் விழாவில் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் அவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குன்றத்தூரில் தெய்வ சேக்கிழார் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் இறுதி நாளான நேற்று பெரிய புராணம் போற்றும் பெண் நாயன்மார்கள் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''நமது முதல்வரை பொறுத்தவரையில் நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்ற பிரிவு இல்லை. அவருக்கு அனைவரும் சமம். ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கியதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. ஆண்டுதோறும் சேக்கிழாருக்கு ஒருநாள் மட்டுமே அரசு விழா நடைபெறும். இந்த ஆண்டு முதல் மூன்று நாட்கள் நடைபெற வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியதின் பேரில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் பக்திமானாக காட்சியளிக்கிறார்'' என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: ஒரே ஆண்டில் இவ்வளவு டன் குட்கா பறிமுதலா? - அமைச்சர் சொன்ன ஷாக் ரிப்போர்ட்!