ஒட்டன்சத்திரத்தில் வீடு புகுந்து டாக்டர் தம்பதியினரை கட்டிப்போட்டு 280 பவுன் தங்க நகைகள், 25 லட்சம் பணம், இன்னோவா கார் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்களா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் உள்ள வீட்டில் டாக்டர் சக்திவேல் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய மனைவி உட்பட 4 பேர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 4 பேரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 280 பவுன் தங்க நகைகள், ரூ 25 லட்சம் பணம் மற்றும் இன்னோவா கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கொள்ளையடித்துச் சென்றவர்கள் வடமாநிலத்தவரா என்ற கோணத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.