தமிழ்நாடு

சாலை இல்லாததால் திருமணம் தடை: நடவடிக்கை எடுக்கப்படுமா திமுக எம்எல்ஏ கேள்வி

சாலை இல்லாததால் திருமணம் தடை: நடவடிக்கை எடுக்கப்படுமா திமுக எம்எல்ஏ கேள்வி

webteam

அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலைகிராமத்தில் சாலை வசதி இல்லாததால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் நிலவுவதால் இப்பகுதியில் சாலை அமைக்கப்படுமா என திமுக எம்எல்ஏ நந்தகுமார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். 


தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் நடைப்பெற்று வருகிறது.சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அணைக்கட்டு சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார்,   அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மேலரசம்பட்டு மலை அடிவாரத்தில் இருந்து குருமலை, பாலம்பட்டு, ஜர்தான்கொல்லை ஆகிய மலை கிராமங்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதிகள் முற்றிலுமாக இல்லை எனவும், அந்த 3 கிராமங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும், சாலை வசதி இல்லாத காரணத்தினால் அங்குள்ள இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறவில்லை என்றும், யாரும் அந்த கிராமங்களுக்கு பெண் கொடுக்கவோ, பெண் எடுக்கவோ முற்படுவதில்லை எனவும் கூறினார்.

அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  வனப்பகுதிகளுக்குள் வாழும் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய சாலைகள் முக்கியமானது என்றும், கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் 906.65 கிலோ மீட்டருக்கு 107 கோடி ரூபாய் செலவில் வனச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அணைக்கட்டு தொகுதிக்குட்ட 3 மலை கிராமங்களுக்கும் மலைச் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.