தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் டிஸ்மிஸ் -மீண்டும் பணியமர்த்தக் கோரி 2வது நாளாக போராட்டம்

webteam

உளுந்தூர்பேட்டையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 'பாஸ்ட் ட்ராக்' முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த 28 பணியாளர்களை திடீரென சுங்கச்சாவடி நிறுவனம் நேற்று முன்தினம் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களுடன் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.

இதையும் படிக்க: குறைந்த விலைக்கு பாலை பெற்று ஆவினில் விலையேற்றி விற்பது வருத்தமளிக்கிறது- உற்பத்தியாளர்கள்