தமிழ்நாடு

திருவள்ளூர்: பூமிக்குள் இருந்து அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர்கள்!

webteam

திருவள்ளூர் அருகே பூமியில் புதைந்து கிடந்த மேலும் ஒரு பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்த மாளந்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் முழு சோதனை செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில் இன்று அருகில் உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் குப்பன் என்ற விவசாயி தமது வீட்டின் பின்புறம் மாடு கட்டுவதற்கு கொம்பு நடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது சுமார் 2 அடி உயரம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் குண்டு போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல் துறையினர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதற்கு நடுவில்  அந்த குண்டை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே அடுத்தடுத்து ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.