தமிழ்நாடு

மதுரவாயல்: ஜனநாயக கடமையாற்றிய 73 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி!

மதுரவாயல்: ஜனநாயக கடமையாற்றிய 73 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி!

JustinDurai

மனநல காப்பகத்தில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மூதாட்டி உதவியாளரோடு வந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் மேற்கு எஸ்பிஐஓ பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த பெண்ணை காப்பக ஊழியர்கள் அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்ய வைத்தனர்.

முகப்பேர் மேற்கில் உள்ள "The banyan home"-ல் தங்க வைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 95 பேருக்கு இந்த முறை வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 18 பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர். நடந்து வந்து வாக்களிக்க முயன்றவர்களை காப்பக ஊழியர்கள் அழைத்து வந்து தங்களது வாக்கை பதிவு செய்ய வைத்தனர்.

இதில் மாற்றுத்திறனாளியாக இருக்கும் 73 வயது மூதாட்டியான லட்சுமி என்பவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக காப்பக ஊழியர் அழைத்து வந்து முகப்பேர் மேற்கு எஸ்பிஐஓ பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் 389-ல் வாக்கை பதிவு செய்ய வைத்தனர்.

மூதாட்டி லட்சுமி வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலியில் வைத்து மையத்திற்குள் அழைத்து சென்றனர். இடது கையில் மூதாட்டி லட்சுமிக்கு மை வைக்கப்பட்ட பிறகு உதவியாளருடன் சென்று தனது வாக்கை பதிவு செய்து மூதாட்டி லட்சுமி ஜனநாயக கடமையாற்றினார்.

- சுப்ரமணியன்