சிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர்களுக்கு வீடு கட்டி தருவதோடு மாதம் ரூ.3000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி நடக்க முடியாத தனது தந்தை மற்றும் மனநலம் பாதிக்கபட்ட தாயரை பார்த்து கொண்டு படிக்க வசதி இல்லாமல் உள்ளது குறித்து புதிய தலைமுறையில் நேற்று செய்தி தொகுப்பு ஒளிபரப்பானது. இந்தச் செய்தியினை பார்த்த பலரும் அனிதாவை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் இந்தச் செய்தி துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சந்திர சேகர் மற்றும் அவரது மகள் அனிதாவை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்திரவிட்டார்.
இதனைதொடர்ந்து அவரின் நேர்முக உதவியாளர் ராஜா, சங்கரலிங்கபுரத்திற்கு சென்று சந்திர சேகருக்கு போர்வை, தலையணைகளை வழங்கியதோடு, முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினையும் வழங்கினார். மேலும் சந்திரசேகரின் வீட்டினை பார்வையிட்டு துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை அடுத்து உடனடியாக வீட்டினை இடித்து நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய வீட்டினை உடனடியாக கட்டிக் கொடுக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனை அடுத்து புதிய வீடு கட்டுவதற்காக அளவீடு செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. மேலும் அனிதாவின் குடும்ப செலவிற்கு மாதந்தோறும் 3000 ரூபாயினை அவரது வங்கி கணக்கில் அளிக்க உள்ளதாகவும், அனிதாவின் படிப்பு செலவு மட்டுமின்றி அவரின் திருமண செலவுகள் வரை அனைத்தையும் தான் ஏற்று கொள்வதாகவும் துனை முதல்வர் உறுதி அளித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தவித்த தனக்கு புதிய தலைமுறை செய்தி மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சந்திர சேகர் தெரிவித்தார். புதிய தலைமுறை செய்தி காரணமாக பலரும் உதவி செய்யும் நிலையில் உச்சகட்டமாக துணை முதல்வர் அவர்கள் உதவிகள் செய்திருப்பது எதிர்பார்க்காதது என்றும் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.